History
மகாலட்சுமி நகர் பகுதியில் 1975-ஆம் ஆண்டு வரை 12 கத்தோலிக்க குடும்பங்கள் மட்டும் வசித்து வந்தனர். இந்த 12 குடும்பங்களும் தாம்பரம் புனித பாத்திமா அன்னை ஆலய பங்கின் உறுப்பினர்களாய், திருப்பலி மற்றும் அனைத்து ஆன்மீக காரியங்களுக்கும் தாம்பரம் பங்குத்தந்தை அருட்பணி. ஜோசப் தைப்பரம்பில் அவர்களை நாடிச்சென்று வந்தனர்.இந்த 12 குடும்பங்களும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தாம்பரம் புனித பாத்திமா அன்னை ஆலயத்திற்கு திருப்பலிக்குச் செல்வதோடு, யாரேனும் ஒருவரது இல்லத்தில் கூடி ஜெபித்தும் வந்தனர்.
ஒருசில வருடங்கள் கடந்தபின், நாம் வாழுகின்ற இப்பகுதியில் நமக்கென்று ஒரு ஆலயம் தேவை என்பதை உணர்ந்து, இப்பகுதியில் ஒரு ஆலயம் கட்டவேண்டுமென்ற தங்களது ஆவலை பங்குத்தந்தையிடம் வெளிப்படுத்தினார்கள். பங்குத்தந்தையும் மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, அதற்கான ஒரு இடத்தை தேர்வு செய்யுங்கள் என்றார். தொடர்ந்து இக்கருத்தினை மனதில் கொண்டு தினமும் தவறாது ஜெபிக்கும்படியும் மக்களை கேட்டுக் கொண்டார்.
அப்போது இந்தப் பகுதியில் சோப்புக் கம்பனி ஒன்று இருப்பதாக ஒருவர் தெரிவித்தார். அந்த இடம் அனைவருக்கும் ஏற்புடைய இடமாக இருந்ததால் பங்குத்தந்தையை சந்தித்து தங்களது விருப்பத்தைத் தெரிவித்தனர். எவ்வித தயக்கமும் இன்றி பங்குத்தந்தை அவர்களை அந்த இடத்தின் உரிமையாளரை நேரில் சந்தித்து, இப்பகுதியிலுள்ள கிறிஸ்தவ மக்கள் கூடி இறைவனைத் தொழுவதற்கு வழிபாட்டுத்தலம் அமைப்பதற்கு, உங்களது கட்டிடமும் அதன் அருகிலுள்ள இடமும் தேவை என்று கேட்டபோது உரிமையார் (SVL) மிகுந்த மகிழ்ச்சியுடன் மிகவும் குறைந்த விலை ரூ.25,000/- க்கு கொடுப்பதாக சம்மதித்து பணத்தை பெற்றுக் கொண்டார். இந்த கட்டிடத்தையும் இடத்தையும் கிரயம் செய்து கொடுத்து விட்டார். இடம் வாங்கப்பட்டபின் ஆலயத்திற்கு என்ன பெயர் வைக்கலாமென்று அனைவரும் கூடி ஆலோசித்து, புனித சூசையப்பர் நமது பங்கின் பாதுகாவலராக இருப்பது நல்லது என்று புனித சூசையப்பர் பெயர் சூட்டப்பட்டது. 1976-ஆம் ஆண்டு மக்களின் ஆன்மீக தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக் திருப்பலி நிறைவேற்றவும், மக்கள் கூடி ஜெபிக்கும் இடமாக இவ்வாலயம் புனிதப்படுத்தப்பட்டது.
Major Milestones
1976-1984 ஆம் ஆண்டுவரை அருட்பணி. ஜோசப் தைப்பரம்பில் ஞாயிறு தோறும் திருப்பலி நிறைவேற்றி வந்தார்கள். மக்கள் காலையிலும் மாலையிலும் கூடி ஜெபித்து வந்தனர்.
இடைப்பட்ட காலத்தில் அருட்பணி. தைப்பரம்பில் அவர்களது இடைவிடா முயற்சியாலும், மேதகு ஆயர் அருளப்பா அவர்களின் ஒத்துழைப்புடன் 1984 ஆம் ஆண்டு தனிப்பங்காக அறிவிக்கப்பட்டு, அருட்பணி. தேவசியா அவர்கள் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்று பணியைத் துவக்கினார்கள்.
அருட்பணி A. தேவசியா (1984-1991)
முதலாவதாக தான் தங்குவதற்கென்று ஒரு சிறிய இல்லத்தை கட்டி முடித்தார்.
பங்குப்பேரவை, பக்த சபைகள் (புனித வின்சென்ட் தெ பவுல்சபை, மரியாயின் சேனை) போன்ற நிர்வாக அமைப்புக்களை உருவாக்கி ஏழை எளிய மக்களின் ஆன்மீக, பொருளாதார தேவைகளை நிறைவு செய்தார். ஏற்கெனவே வாங்கப்பட்ட நிலத்தின் அருகில் ஒரு கிரவுன்ட் இடத்தை வாங்கினார். ஆனால் வாங்கிய இடங்களுக்கு இடைப்பட்ட ஒரு கிரவுன்ட் இடத்தை அவரால் வாங்க இயலவில்லை.
சித்தாலப்பாக்கத்தின் அருகில் அரசன் காலனியில் வசித்து வந்த 10 கல்லுடைக்கும் ஏழைத் தொழிலாளர் நலன் கருதி அந்தோனியார் சிற்றாலயத்தை உருவாக்கினார்.
ஏழை மக்களின் வீடுகளில் இறப்பு ஏற்படும்போது அடக்கச் செலவிற்கு மக்கள் படும் கஷடத்தை உணர்ந்து அவர்களது துயர் துடைக்க, பங்கு மக்களின் சிறு பங்களிப்பைக் கொண்டு “Death Relief Fund” “இறப்பு அடக்க நிதியை” உருவாக்கினார்.
ஆலயம் கட்டவேண்டுமென்று முழு முயற்சி மேற்கொண்டார். ஆனால் கடவுள் அந்த வாய்ப்பை அவருக்குக் கொடுக்கவில்லை. காரணம் இடைப்பட்ட இடத்தை வாங்க முடியவில்லை. அதற்காக அந்த இடத்தை நோக்கியபடி ஒரு சிலுவையை நட்டு வைத்து தொடரந்து ஜெபித்து வந்தார்கள். அந்த சிலுவைதான் இன்று ஆலய முகப்பிலுள்ள கல்வாரி நிழற்குடையின் கீழ் உள்ள சிலுவை.
அருட்பணி சிரியாக் இல்லிமூட்டில் (1991–1998)
தந்தையவர்களின் பணிக்காலம் இப்பங்கின் “பொற்காலம்” என்றால் மிகையாகாது.
தந்தை அவர்கள் பொறுப்பேற்ற போது 450 குடும்பங்கள் மட்டுமே இருந்தது. சான்று பகரும் சிறு சமூகக் கூட்டங்களின் வழியாக, பங்கு மக்களை நல்லுறவில் வாழ வழிகாட்டியதோடு நற்செய்தி அறிவிக்கும் பணி சிறப்பாக நடைபெற்றது.
அன்றைய பங்குப் பேரவையினரின் தூண்டுதலாலும், தந்தையின் ஜெபமும் விடா முயற்சியும், கிடைக்காது என்ற இடம் குறைந்த விலைக்கே கிடைத்தது. அதன்பின்தான் ஆலயம் கட்ட முனைப்புடன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இறைவனின் துணைகொண்டு ஆலய கட்டுமானப்பணிகள் எவ்வித தொய்வுமின்றி நடை
பெற்று, 16.11.1997 அன்று அன்றைய பேராயர் மேதகு அருள்தாஸ் ஜேம்ஸ் அவர்களால் புனிதப்படுத்தப்பட்து.
தந்தையவர்களின் காலத்தில் வளன்நகர் தனிப்பங்காக பிரித்துக் கொடுக்கப்பட்டது. மேடவாக்கத்தில் ஆலயம் கட்டுவதற்கென்று ஒரு ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. மக்களின் வழிபாட்டுக்காக ஒரு சிற்றாலயமும் கட்டப்பட்டது. ஆலய சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.
இரட்சகர் சபை குருக்கள் (1998–2001)
அருட்பணி. டேனியல் ஜெயசிங் அவர்கள் 1998 ஆம் ஆண்டு பங்குத்தந்தையாக பெறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் பணி செய்தார். ஆன்மீக மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்கள் இரட்சகர் சபை குருக்கள் இவர்களின் மறையுரைகள், தியானச் செய்திகள், ஆன்மீக கருத்தரங்குகள் மக்களை ஆன்மீக வாழ்வில் ஒரு மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியது.
அருட்பணி. டேனியல் ஜெயசிங் அவர்களால் அன்பியங்கள் உருவாக்கப்பட்டது. பங்கு மக்களிடையே அன்பும், நல்லுறவும், ஒற்றுமையும் ஏற்பட வாய்ப்பாய் இருந்தது. அன்பிங்களில் “உணவுப் பகிர்வு” சமத்துவ, சகோதரத்துவத்துக்கு அடித்தளமாய் அமைந்தது. ஒவ்வொரு ஆண்டும் அன்பிய ஆண்டு விழா பங்கின் குடும்ப விழாவாக கொண்டாடப்பட்டது.
லூர்து மாதா கெபி கட்டுவதற்கான முதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அருட்தந்தை யேசுதாஸ் அவர்கள் 2000-2001 பங்குத்தந்தையாக சிறப்பாக பணி செய்தார்கள். லூர்து மாதா கெபி முழுமை பெற்று, உதவி ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ் அவர்களால் புனிதப்படுத்தப்பட்டது.
அருட்பணி. ஜார்ஜ் பாலக்காட்டுக் குண்ணல் (2001–2009)
இரட்சகர் சபை குருக்களின் நிர்வாகத்திலிருந்து மீண்டும் மறைமாவட்ட குருக்களிடம் பங்கு நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டு, அருட்பணி. P. ஜார்ஜ் 2001 ஆம் ஆண்டு பங்குத் தந்தையாக பொறுப்பேற்றார்கள்.
அன்பியங்கள் சிறப்பாக இயங்கியது. அன்பிய ஆண்டுவிழாக்கள் தொடர்ந்து நடைபெற்றன. ஓலைக் குடிசைகளையெல்லாம் ஆஸ்பெஸ்டாஸ் வீடாக மாற்றம் செய்யப்பட்டது. அன்பியங்கள் ஒன்றிணைந்து பணம் திரட்டி பங்கில் ஓலைக்குடிசையில் வாழ்ந்த 40க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஆஸ்பஸ்டாஸ் வீடு கட்டித் தரப்பட்டது.
ஐந்தாவது அன்பிய ஆண்டுவிழா நினைவாக ஏழை மாணவர்களுக்கென “கல்விநிதி” உருவாக்கப்பட்டு ஆயர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
தவக்கால உண்டியல் கொடுக்கப்பட்டு அதன் மூலம் கிடைத்த தொகை ஏழை மாணவர்களின் கல்வி நிதியில் சேர்க்கப்பட்டது. சந்தோஷபுரத்தில் மாதா கெபி கட்டப்பட்டது. மேடவாக்கம் சிற்றாலயம் விரிவுபடுத்தப்பட்டது. வேங்கைவாசலில் ஆலயம் கட்டுவதற்கென 19 சென்ட் நிலம் வாங்கப்பட்டது. மேடவாக்கத்தில் ஏற்கெனவே வாங்கப்பட்ட நிலத்திற்கு அருகில் மேலும் 25 சென்ட் நிலம் வாங்கப்பட்டது.
தந்தையின் முயற்சியால் மேடவாக்கம் தனிப்பங்காகப் பிரிக்கப்பட்டது. பல்நோக்கு மண்டபம் கட்டுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, பழைய கோவில் இடிக்கப்பட்டு புதிய மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு கட்டிட வேலை ஆரம்பிக்கப்பட்டது.
அருட்பணி. P. சிங்கராயர் (2008-2011)
பங்கு மக்களின் நீண்டநாள் ஆசையான பல்நோக்கு மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது. புதன் கிழமைகளில் சூசையப்பர் நவநாள், தேர்ப்பவனி தொடங்கி மக்களின் ஆன்மீக காரியங்களை சிறப்பாக முன்னெடுத்துச் சென்றார்கள். நற்கருணை ஆலயம் திறக்கப்பட்டது.
அருட்பணி பேட்ரிக் பூந்தோட்டா (2011-2013)
மிகவும் குறுகிய 2 ஆண்டுகள் மட்டுமே பங்கு தந்தையாக பணி செய்தார்கள். தந்தையவர்கள் பங்கு மக்களிடையே நிலவிய அசாதாரண நிலமையை மாற்றி அமைதிச் சூழலை உருவாக்க கடினமாக உழைத்தார்கள். தனது நீண்ட கால அனுபவத்தால் அதை சாதித்துக் காட்டினார்கள்.
அருட்பணி. அதிரூபன் (2013-2018)
அன்னைக்கு கெபி கட்டப்பட்டது. ஆலய சுற்றுச்சுவர் பராமரிக்கப்பட்டு, விவிலிய வார்த்தைகள் எழுதப்பட்டன. கல்வாரியை நினைவுகூறும் வகையில் நிழற்குடை, ஆலய விரிவாக்கம் மற்றும் ஆலயத்தின் பீடம் புதுப்பிக்கப்பட்டது. ஆலய தரை முழுவதுமாக புதுப்பிக்கப்பட்டது. ஆலய முகப்பு கோபுரங்கள் எழுப்பப்பட்டது. புனித சூசையப்பரின் வாழ்க்கையை சித்திரிக்கும் பீடம் அழகுற அமைக்கப்பட்டது.
தந்தையவர்களின் முயற்சியால் செங்கை மறைமாவட்ட முதன்மைக் குரு அருட்பணி ஞா. பாக்கியரெஜிஸ் அவர்களின் உதவியோடு “மகாலட்சுமி நகர் பங்கு” என்பது “சேலையூர் பங்கு” என்று பெயர் மாற்றம் பெற்றது.
அருட்பணி. ராஜன் துரை பாபு (2018-2023)
தந்தையவர்கள் தான் செய்ய நினைத்ததையெல்லம் செய்ய முடியாத நிலையை கொரனா என்ற கொடிய நோய் உருவாக்கி விட்டது. இரண்டு ஆண்டுகள் (2020-2022) எல்லா பணிகளுமே முடங்கிப்போன நிலையில், ஏழை எளிய மக்களின் மீது கொண்ட அக்கரையில் அவர்களுக்குத் தேயைான உதவி செய்து, துணை நின்றது மறக்க முடியாத ஒன்று. கடினமான சூழலிலும்
ஆலயத்திற்கும் ஆலய வளாகத்திற்கும் புதிய ஜெனரேட்டர், பல்நோக்கு மண்டபம், முதல் மாடி AC பொருத்தப்பட்டது. பங்கின் கனவாக இருந்த தேழகள், இயேசுவின் இறுதி சடங்கு பெட்டி அமைத்தது, வெள்ளிவிழா தயாரிப்புகள் – புதிய நூலகம்,
பங்குத் தந்தையர் அலுவலகமும் புதுப்பித்தல் என்று பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டது.
அருட்பணி. தாமஸ் பிரேம் குமார் (2023…)
2023 ஜூன் மாதம் முதல் தந்தையவர்கள் பணி பொறுப்பேற்று, சேலையூர் இறைசமூகத்தை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்தி வருகின்றார்.
1975 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை இப்ங்கிற்காக உழைத்த பங்குத் தந்தையர்கள், 12 அருட்பணியாளர்கள். பங்குப்பேரவை பக்தசபை உறுப்பினர்கள் அன்பியப் பொறுப்பாளர்கள், வளர்ச்சியில் பங்குகொண்ட அனைவரையும் பாராட்டுகிறோம். நமக்காக உழைத்திட்ட 5 அருட்பணியாளர்கள் மூத்த பங்கு உறுப்பனர்கள் அநேகர் நம்மிடையே இல்லை. அவர்களை நினைவு கூறுவோம். ஜெபிப்பேம்.
A Place of Faith, Hope, and Love
Find your spiritual home at . Be part of a vibrant community. From Sunday worship to outreach programs, find opportunities to connect, grow, and serve God and others